எமக்குத் தொழில் எழுத்து

எமக்குத் தொழில் எழுத்து
உலகத்தின் ஆகச்சிறந்த செம்மொழிகள் பிறவற்றில் எழுத்தாளன் தெய்வத்திற்கு சமமாக மதிக்கப்படுகிறான். உலகின் மூத்தமொழி என்று கொண்டாடுகிற தமிழ்ச்சூழலில் எழுத்தைத் தொழிலாகக்கொண்டு வாழ்வது தற்கொலைக்குச் சமமானதாக இருக்கிறது. இந்த நூலில் இடம்பெற்றிருக்கிற படைப்பாளிகளுக்கு அவர்களின் ஊரில் வெவ்வேறு பெயர்கள் உண்டு. பாத்திரக்கடைக்காரர், கறிக்கடைக்காரர், செக்யூரிட்டி, ஆட்டோக்காரர், எலெக்ட்ரீஷியன், வெல்டர், ஃபிட்டர்... தொழிலை முன்னிறுத்தி சமூகம் இவர்களுக்கு இடும் அடையாளங்கள் வேறு. ஆனால் இவர்களின் தவம், எழுத்து.
பொதுவெளியில் இவர்கள் எதிர்கொள்ளும் எல்லா அனுபவங்களையும் இவர்களின் எழுத்து இலக்கியமாக்குகிறது. காலப் பெருவெளியின் கல்மேனியில் அந்த அனுபவங்களை எல்லாம் கல்வெட்டாகச் செதுக்கி வைக்கிறார்கள். எழுத்தைத் தொழிலாகக் கொள்ளாமல் வாழ்க்கையாக, உயிராகக் கொண்ட 26 எழுத்தாளர்களின் பின்புலத்தையும், அவர்களின் படைப்புகளையும், சமகால வாழ்க்கைச் சூழலையும் கதைப்படுத்தும் முயற்சியே இந்த நூல். ‘குங்குமம்’ இதழில் தொடராக வந்து பரவலாகக் கவனம் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. எழுத்தாளனின் நூல்களைப் படிக்கும் வாசகர்களுக்கு எழுத்தாளனைப் படிக்கும் அனுபவத்தை இந்நூல் வழங்கும்.