திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் கடந்தகால செயல்பாடுகள் குறித்தும் பல புத்தகங்களும் மீள்பதிப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், சில அடிப்படைக் கேள்விகளை எழுப்பி விடை காண முயல்வது அவசியமாகிறது.
உண்மையில், திராவிட இயக்கம் என்பதாக ஒன்று இருந்ததுண்டா? அப்படியே இருந்தாலும், அதன் நூற்றாண்டைக் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்த அளவுக்கு வாரிசுரிமை உண்டு? திராவிட என்ற சொல்லின் பின்னால் உள்ள அரசியல் என்ன? நீர்த்துப் போய்விட்ட இந்தச் சொல்லுக்கு மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்கச் சிலர் துடிப்பது ஏன்?
ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரையில் திராவிட அரசியலை உயர்த்திப் பிடித்தவர்களின் பின்னணி, நோக்கம், நிலைப்பாடு என்று அனைத்தையும் ஆராயும் இந்தப் புத்தகம், இதுவரையில் நாம் அப்படியே ஏற்று நம்பிக்கொண்டிருக்கும் சில ஆதாரமான கருத்தாக்கங்களையும் நம்பிக்கைகளையும் நிர்த்தாட்சண்யமாக உடைத்தெறிகிறது.
ஆரியர்கள், திராவிடர்கள் எனப்படுவோர் யார்? முந்தைய நூற்றாண்டுகளில் பிராமணர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்குப் பரவியிருந்தது? நம் சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைக்கு யார் காரணம்? ஈ.வே.ராமசாமி முன்வைத்த அரசியல், சமூகத் தீர்வுகள் யாருக்கு ஆதரவானவை? யாருக்கு எதிரானவை?
கூர்மையான வாதங்களையும் இலக்கிய, வரலாற்று, சமூகச் சான்றுகளையும் முன்நிறுத்தி வாதிடும் நூலாசிரியர் மலர்மன்னனின் இந்தப் புத்தகம் சமகால அரசியல் களத்தில் ஒரு சிறு புயலை தோற்றுவிக்கப்போவது நிச்சயம்.