சீனா வல்லரசு ஆனது எப்படி?

சீனா வல்லரசு ஆனது எப்படி?
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே பெரிய ஆசிய நாடுகள். மக்கள் தொகை இரண்டு நாடுகளிலும் அதிகம். இரண்டுமே தொன்மையான நாகரிக வரலாற்றைக் கொண்டுள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகம். ஏழைமை, ஊழல், சுற்றுச்சூழல் மாசு என்று இரு நாடுகளின் பிரச்னைகளும்கூடப் பொதுவானவையே. இருந்தாலும் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் சீனா பல துறைகளில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. எப்படி நடந்தது இந்த அதிசயம்?
* சீனாவை நம்முடைய போட்டி நாடாக நாம் கண்டாலும் உண்மையில் உலக வல்லரசான அமெரிக்காவோடுதான் சீனா நேரடியாகப் போட்டியிட்டுக்கொண்டிருக்கிறது. வெகு விரைவில் அமெரிக்காவை முந்தித்தள்ளிவிட்டு சீனா உலக வல்லரசாகிவிடும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள். இதை எப்படிச் சாத்தியப்படுத்தியது சீனா?
* சீனாவை எப்படி வகைப்படுத்துவது? அது முதலாளித்துவ நாடா, கம்யூனிச நாடா? மாவோவின் பாதையில் இருந்து அந்நாடு முழுவதுமாக விலகிவிட்டதா? எனில், ஏன் அங்கே இன்னமும் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருக்கிறது?
* சீனாவிடம் இருந்து இந்தியா கற்கவேண்டிய பாடங்கள் என்ன? கற்கவே கூடாத விஷயங்கள் என்னென்ன?
சீனா ஒரு வல்லரசாக மாறிய கதையைப் படிப்படியாக விவரிக்கும் இந்தப் புத்தகம் அந்நாட்டின் சமகால சமூக, அரசியல், பொருளாதார வரலாற்றையும் எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. அரசியல், வரலாறு உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து புத்தகங்கள் எழுதி வரும் ரமணன், பத்திரிகைத் துறையிலும் துடிப்புடன் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறார்.