புத்தர்பிரான்

புத்தர்பிரான்
‘கீழ்த்திசை சிந்தனை’ என உலக நாடுகள் கொண்டாடும் பல தத்துவங்களில் முதன்மையானது பௌத்தம். இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின்னரே மேற்கத்திய நாடுகள் மனித இனத்தின் மாண்பை உணர்ந்தன. ஆனால் அதற்கும் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நம் மண்ணில் உதித்த செழுமையான சிந்தனையே பௌத்தம். உலகத்துக்கே அன்பின் வழியை உணர்த்திய புத்தர்பிரானின் மகத்துவமான வாழ்வையும், அவரது போதனைகளையும், அவர் விட்டுச் சென்ற நம்பிக்கைகளையும் முழுமையான நூலாகத் தந்திருக்கிறார் கௌதம நீலாம்பரன். பல ஆண்டுகள் உழைப்பில் உருவான நூல் இது. மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட சடங்கு, சம்பிரதாயங்களையும், பிறப்பால் இழிநிலை என ஒதுக்கி வைத்த சமூக அவலங்களையும் எதிர்த்து உருவானதே பௌத்தம். எனவேதான் மக்களின் மதமாக இது செழித்து வளர்ந்தது. போர்வெறியோடு ரத்த வேட்கையில் அலைந்த பல பேரரசர்களை பௌத்தம் ஆற்றுப்படுத்தி இருக்கிறது. எனவேதான் அவர்கள் இதைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். பௌத்தம் இந்தியாவில் பிறந்து, சீனாவில் வளர்ந்து, ஜப்பானில் முழுமையடைந்ததாகச் சொல்வார்கள். இன்றைக்கும் மன அமைதி தேடும் அத்தனை பேருக்கும் புத்தனே பேராசானாகத் தெரிகிறான். ஆசைகளைத் துறக்கச் சொன்னவனாக மட்டுமே பலர் புத்தனை அறிவார்கள். அவன் அளித்துச் சென்ற அத்தனை ஞானப் பொக்கிஷங்களையும் ஒரு பெரும் விருந்தாகத் தந்திருக்கிறார் கௌதம நீலாம்பரன்.