அழகின் அசைவு

அழகின் அசைவு
தமிழ்ப் பேராசிரியராகிய தொ.ப. அவர்களின் பார்வைக் கூர்மையில் புறநானூறு முதல் புதுக்கவிதை வரை, தொல்காப்பியத்திலிருந்து தற்காலப் பழகுதமிழ் வரை துலங்குவதை விதந்து சொல்லவேண்டியதில்லை.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவினர் ஒரு காலத்தில் சமயக் குருமார்களாக இருந்த வரலாற்றுச் சுவடுகள், மொட்டையடித்தல் என்னும் பௌத்த வழி வழக்கத்தின் தொடர்ச்சி, சமண நியாய பரிபாலனப் பெரும்பள்ளி பகவதி அம்மன் கோயிலாக வழிபடப்படுதல், வைணவ வழிபாட்டில் வைதிகத் ‘தூய்மை’ கடந்த வெகுமக்கள் பண்பாட்டு ஏற்பு, வள்ளி மணாளன் முருகன் பெருஞ்சமயச் சார்புற்றுச் சண்முகன், கார்த்திகேயன், சுப்பிரமணியன் என்றெல்லாம் ஆன காலத்தில் தெய்வானை சேர்ந்த கதை, துலுக்க நாச்சியார் அழகரின் காதலியான கதை, தாய்த்தெய்வ வழிபாட்டின் செல்வாக்குக் கத்தோலிக்கத் தேவமாதாவிடம் புலப்பட்ட வரலாறு, தைப்பூசத்தில் தமிழ்ப் புத்தாண்டு காணுதல் எனச் சாதிகள், சமயங்கள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் என்னும் பண்பாட்டின் பொதுப் பெரும் போக்குகள் ஒருபுறம்.
உலையிலேயே உப்புப் போடுதல், உப்பைத் தனியே உணவுடன் சேர்த்தல் என்னும் தமிழர் வழக்கங்களில் சமூகப் படிநிலைகள், தமிழகத்தின் இயல்பான தின்பண்டங்கள், வந்து புகுந்த அல்வா முதலியவை, இயல்பாக உடுப்பவை இரண்டுடன் புடைவை முதலியன வந்து புகுதல், உரல் உலக்கை முதலிய புழங்கு பொருட்கள், உறவுப் பெயர்களில் பொதிந்திருக்கும் மரபு, தவிட்டுக்குத் தத்தெடுக்கும் வழக்கம், பேரப்பிள்ளைகளுக்கும் சடங்குகளில் இடமிருத்தல், இறப்பிலும் விருந்தோம்பல், கருவுற்ற பெண் கணவனை இழந்த நிலையில் அதனை அறிவிக்கும் நாகரிகக் குறியீட்டுச் சடங்கு, மரபார்ந்த பல்லாங்குழி முதலிய விளையாட்டுகளின் சமூக- பொருளாதாரப் பின்னணி என உணவுகள், உடைகள், விளையாட்டுகள் என அன்றாடங்களின் பண்பாட்டு அமிசங்கள் மறுபுறம்.
இன்னும் இன்னும் எத்தனையோ!
அவரது அனைத்துப் பண்பாட்டுக் கட்டுரைகளின் பெருந்தொகுப்பாக வாய்த்த இந்நூல் அறிஞர்களுக்கு ஆய்வுத் துல்லியம்; ஆய்வாளர்களுக்குக் கருதுகோள் களஞ்சியம்; பொதுவாசகருக்கு முன்னறியாப் பல்சுவை விருந்து.