அவரவர் வாழ்க்கையில் (சினேகன்)

அவரவர் வாழ்க்கையில் (சினேகன்)
முதல் சந்திப்பிலேயே கவனம் ஈர்ப்பவர்கள் வெகு சிலரே. பார்த்த மாத்திரத்தில் ஏதோ பல வருடங்கள் பழகியவர்கள்போல் வாஞ்சை காட்டும் அத்தகைய சிலரில் சினேகன் குறிப்பிடத்தக்கவர். ஏதோவொரு பின்னணியில் வெற்றியைச் சுவைப்பவர்களுக்கு மத்தியில் காயங்கள், துயரங்கள், அவமானங்கள் என கசப்புகள் பலவற்றையும் கடந்து ஜெயித்திருக்கும் சினேகனின் வாழ்வியல் குறிப்புகளே இந்த நூல்! காயங்களையே கௌரவங்களாக நினைக்கும் மனப்பக்குவம் இன்றைய காலத்தில் பலரிடத்திலும் இல்லை. பற்பல போராட்டங்களை எதிர்கொண்டு பரிவட்டம் சூடும் போர்க்குணம் மிகச் சிலருக்கே இருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கால் தடத்திலும் காலம் சொல்லிக் கொடுத்த அனுபவப் பாடங்களையே இனிவரும் வாழ்க்கையை வாழ்வதற்கான முதலீடுகளாக வைத்து வாழ்ந்து வரும் பாடலாசிரியர் சினேகனின் மனப்பகிர்வு எவரையும் போராட வைக்கும் வல்லமை வாய்ந்தது. நினைவு தெரிந்த நாள் முதல் தன்னால் மறக்க முடியாத நிகழ்வுகளை, நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் நிஜங்களை, நினைவில் பதிந்த பதின் பருவத்துப் பரவசக் காட்சிகளை... அச்சு பிசகாமல் அச்சில் ஏற்றியுள்ளார் சினேகன். தனது ஊரின் பூர்விகம் தொடங்கி, உறவின் உண்மை நிலையைத் தொடர்ந்து, உணர்வுகளின் உச்சகட்டத்தை விளக்கி, வாழ்வை உரிமையோடு வாழ்வதற்கான வழிமுறைகளின் மூலம் மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை சினேகன் விளக்கி இருக்கும் விதம் அலாதியானது. உரைநடை வடிவில் உள்ள இந்த நூலில், ஆங்காங்கே தத்துவங்களும், கவிதை வரிகளும், பாடல்களும் நிறைந்து இருக்கின்றன. இவை, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒளிந்துள்ள சூழ்சுமங்களை அழகாகச் சுட்டிக்காட்டுகின்றன. சினேகன் கடந்து வந்த காலத்தை காட்சி தவறாது படிக்கும் ஒவ்வொருவருக்கும், தங்களின் சிறுவயதுக் காட்சிகள் நிச்சயம் சிறகடிக்கும். புத்தக வடிவில் சினேகன் எழுதி இருக்கும் வாழ்வியல் கவிதை இது!