அத்ரிமலை யாத்திரை

அத்ரிமலை யாத்திரை
அத்ரிமலை யாத்திரை என்ற இந்தப் புத்தகம், மலைமீது நிலை கொண்டிருக்கும் இறைவனைத் தொழச் செல்லும் பயணத்தை விவரிக்கிறது. உண்மையான பக்தி இருந்தால், மலைத்தொடரே ஆனாலும், ஒளிபுக முடியாத வனமே ஆனாலும், எதிர்ப்படுபவை கொடிய விலங்குகளே ஆனாலும், இறைவனை தரிசித்துத் தொழமுடியும் என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது.
ஏதோ புறப்பட்டோம், ஏற்கெனவே போய்வந்தவர்களின் துணையோடும், அவர்களுடைய அனுபவ வழிகாட்டலோடும், அத்ரிமலைப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அலட்சியமாக நினைத்துவிடக்கூடாது; அரசு வனத்துறை அதிகாரியின் அனுமதியும் இப்படித்தான் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால் கொஞ்சம் சிக்கல் நிறைந்த பயணம்தான் இது.
ஆனால் அத்ரி முனிவரும், அகத்திய முனிவரும் சென்ற பாதை என்ற உருவகத்தில் அவர்கள் பயணித்த பாதையில் நாமும் பயணிக்கிறோம் என்ற எண்ணமே நமக்குப் புத்துணர்வைக் கொடுப்பது நிச்சயம்.அவர்கள் பாதங்கள் பதிந்த அதே பாதையில் நாமும் பாதம் பதித்துப் பயணப்படுகிறோம் என்ற அனுபவம் சிலிர்ப்பைத் தருவதொன்றாகும்.
பயணத்தின்போது கேட்கும் பறவையினங்களின் இனியஒலி, மென்மையாகத் தழுவிச் செல்லும் தென்றல், திடீரெனப் பொழியும் மழை, வெற்று கட்டாந்தரை போலத் தோன்றிய மலையிலிருந்து வெள்ளியை உருக்கிக் கொட்டினாற்போல வீழும் அருவிகள், அமானுஷ்ய குரல்கள் என்று ஒரு ‘திக், திக்’ பக்திப் பயணமாக, வர்ணனையுடன் அமைந்திருக்கிறது இந்தப் புத்தகம்.
பக்தி ஒன்றே துணையாக, அத்ரி முனிவர் உடன் வருகிறார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இந்தப் பயணம் எளிதானதாகவே முடிவதை அனுபவத்தில்தான் உணரமுடியும்.