அணு ஆற்றல் 2.0

அணு ஆற்றல் 2.0
சமூகத் தேவைகளை, புவி வெப்பமாதல் இன்றி நிறைவு செய்வதற்கு அணு ஆற்றல் இன்றியமையாதது. அதனை நிராகரித்துவிட்டு புவிப் பந்தை சமூகச் சீரழிவிலிருந்தும், சூழல் பேரழிவிலிருந்தும் காப்பது இயலாது. இதனைச் சொல்பவர்கள் அணு ஆற்றல் துறையினர் மட்டுமல்ல. சுற்றுச் சூழல், சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக தம் வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர்களும் கூறுகின்றனர். இவர்களில் பலர் புவி வெப்பமாதல் எனும் பிரச்சனை முன்னுக்கு வருவதற்கு முன்புவரை ‘அணு ஆற்றல்’ என்பதை எதிர்த்தவர்கள்தாம். அதிலுள்ள ஆபத்துகளை கருத்தில் கொண்டு அது மனித குலத்திற்கு பலன்களுக்கு மேலான பாதகங்கள் கொண்டது என்று பிரச்சாரம் செய்தவர்கள்தாம். ஆனால் ‘புவி வெப்பமாதல்’ எனும் பேராபத்தின் விளிம்பிற்கு உலகம் வந்ததும், அணு ஆற்றல் துறையில் நடந்த முன்னேற்றங்களும் மாற்றங்களும் இவர்களை மனம் மாறச் செய்துள்ளது. நேர்மையான மனமாற்றத்திற்கு உள்ளான இவர்கள் ‘அணு ஆற்றல்’ தவிர்க்கவியலாதது மட்டுமல்ல; ஒப்பீட்டளவில் மேலானதும்கூட எனும் நிலைபாட்டிற்கு வந்து அதனை பரந்துபட்ட மக்களிடம் விளக்கும் பணியைச் செய்பவர்களாவும் மாறியுள்ளனர். இந்த வரிசையில் வரும் முக்கியமான பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மார்க் லைனாஸ். அவர் பசுமையான எதிர்காலத்திற்கு ‘அணு ஆற்றல்’ ஏன் இன்றியமையாதது என்பதை விளக்குகின்றார்.