ஆறாம் திணை பாகம் 2

ஆறாம் திணை பாகம் 2
ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளைக் கொஞ்சம் அக்கறையுடன் உண்டாலே ஏராளமான நோய்கள் வராமல் காக்கலாம் என்பதை நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன் முதல் பாகத்திலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்காலத்தில் பொருத்தம் இல்லாத தயாரிப்பில் உருவான ‘பஃப்’ செய்யப்பட்ட பாக்கெட் நொறுக்குச் சிற்றுண்டிகளான, சிப்ஸ், கார வகைகள், ஏரியேட்டட் டிரிங்க்ஸ் ஆகியவற்றை உண்ணவே இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். இவற்றால் உடலுக்கும் பலம் ஏற்படுவதில்லை. இவை நோயையும் வரவழைக்கின்றன. நாம் எதை உண்ண வேண்டுமோ அதை உண்ணாமல் உண்ணத் தகாததை உண்கிறோம். இந்த விஷயத்தைப் பற்றிய தெளிவு இன்மையே இதற்கெல்லாம் காரணம். மேலும், வியாபார நோக்கில் அதிக விளம்பரங்கள் செய்து வெளிநாட்டு நிறுவனங்கள் இதை நம் மேல் திணிக்கின்றன. இதைத் தெள்ளத் தெளிவாக பொட்டில் அடித்தாற்போல விளக்குகிறார் நூல் ஆசிரியர். கூடவே பாரம்பரிய உணவுகளை சுவையாக, எந்தெந்த மாதிரி தயாரிக்கலாம், அதன் மருத்துவ குணம் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் இவை. இவற்றில் சில ஏற்கெனவே முதல் பாகமாக முழுப் புத்தகமாக வெளி வந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்றது. அதைத் தொடர்ந்து மீதியுள்ள அனைத்துக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு இப்போது நூல் வடிவில் இரண்டாம் பாகமாக உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்தப் புத்தகத்தைப் படித்தால் ‘நம் வருங்கால சந்ததியை, குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும். அதற்கு பாரம்பரிய உணவுதான் மருந்து. அந்த உணவை விதவிதமாகப் பக்குவமாகத் தயாரிப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது’ என்ற விழிப்பு உணர்வு நிச்சயம் ஏற்படும்.