ஆளுமைகள்

ஆளுமைகள்
இத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் எல்லாம் இப்படி ‘ஆளுமைகள்’ என்கிற பெயரில் வெளிவரும் ஒரு தொகுப்புக்காக எழுதப்படுகின்றன எனும் உணர்வோடு எழுதப்பட்டவை அல்ல. அவ்வப்போது பல்வேறு பின்னணிகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. இன்குலாப், பெருஞ்சித்திரனார், மைதிலி சிவராமன், மருத்துவர் ஜீவா முதலானவர்கள் குறித்த கட்டுரைகள் அவர்களின் நினைவு நாட்களில் பேசிப் பின் இதழ்களில் வெளிவந்தவை. அல்லது அவர்களின் நினைவு மலர்களுக்காக எழுதப்பட்டவை. எட்வர்ட் செய்த், பரந்தாமன், பாலகோபால், அனந்தமூர்த்தி ஆகியோர் குறித்த கட்டுரைகள் அவர்களின் மரணத்தை ஒட்டி கண்கள் கசிய மனம் நெகிழ்ந்து எழுதியவை. இம்மானுவேல் சேகரன் குறித்த கட்டுரை பேராசிரியர் ஒருவரது ஆய்வேடு நூலாக வரும்போது அதற்கு முனுரையாக எழுதப்பட்டது. இந்தியாவின் ஆக முன்னோடிக் கம்யூனிஸ்ட் ஆகிய எம்.என்.ராய் குறித்த கட்டுரை அவரை நான் தெரிந்துகொள்ள வேண்டும் என அவரது நூல்களில் சிலவற்றைப் படித்தபோது எழுதப்பட்டது. ராயின் பாசிசம் குறித்த நூலுக்கு முன்னுரை எழுத ஒரு வாய்ப்பு வந்தபோது இப்படி அதைப் பயன்படுத்திக் கொண்டேன். எல்லோருக்கும் தெரியும் நான் காந்தி, நேரு ஆகியோர் மீது மிக்க மரியாதை கொண்டவன் என்பது.