18வது அட்சக்கோடு

18வது அட்சக்கோடு
தெலுங்கு தேசத்தில் சென்று குடியேறிய ஒரு தமிழ்க் குடும்பத்து இளைஞனின் அனுபவங்களைப் பற்றியது, அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு. இந்திய விடுதலைக்குச் சற்று முன்பு தொடங்கி, விடுதலைக்குப் பிறகான சிறிது காலம் வரை பரவும் இந்நாவல், இதுகாறும் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த படைப்புகளுள் ஒன்றாக மதிப்பிடப்படுவது. நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ், இந்திய அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ள அத்தனை மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடத் தேர்வான இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, மத நல்லிணக்க விருது பெற்றது. இதன் கன்னட மொழிபெயர்ப்புக்காக, மொழிபெயர்ப்பாளர் சேஷ நாராயணா சாகித்ய அகடமி விருது பெற்றார். 1977ம் ஆண்டுக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்ற இந்நாவல், நிஜாம் சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைவதற்கு முன் நடைபெற்ற கலவர அரசியல் சூழலைக் காட்சிப்படுத்துகிறது. ஒரு தனிமனிதனின் அனுபவங்களின் ஊடாகவே காட்சிகள் விவரிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுடைய ஆன்மாவின் மௌன ஓலத்தை இதில் கேட்க முடிவதுதான் இந்நாவலின் மகத்தான வெற்றி.