வேருக்கு நீர்
வேருக்கு நீர்
நான் வங்கத் தலைநகர், கல்கத்தாவுக்குச் சென்றேன். அங்கே நான் நேரில் கண்ட காட்சிகளையும் அனுபவங்களையுமே கதையில் சித்திருக்கிறேன். அந்த அமைதி குலைந்த அன்றாட வாழ்க்கையைப் பல கோணங்களிலிருந்தும் காணும் வண்ணம், பீகார் மாநிலத்திலும் பிரயாணம் செய்தேன்; பாட்னாவில் இரண்டு மாதகாலம் தங்கினேன். அரசியல், சூதாடும் களமாகும் அவலத்துடன், மக்களின் பின்தங்கிய நிலைக்குக் காரணமான அறியாமையும் வறுமையும் இசைந்து விட்டால், வன்முறைக் கிளர்ச்சியின் தோன்றாமலிருக்க முடியாது. அந்நாளில் உயர்மட்டத்தில் விருந்து போன்ற வைபவங்களில் ஒழுக்கச் சிதைவு ஒன்றே குறியாக இருப்பதைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பும் பெற்றேன். தனி மனித ஒழுக்கம் சமுதாயத்துக்கு என்ற அடிப்படையான காந்திய இலட்சியங்கள், நழுவிப் போய் விட்டன. அந்நாள் எனக்கேற்பட்ட மனக்கிளர்ச்சியும் துயரமும் இந்நவீனத்தைப் புனையத் தூண்டுகோலாயின.
இந்நவீனத்தைப் பலதரப்பட்ட மக்கள் ஆய்வாளர், அரசியலார் படித்து, பல வகைகளில் என்னிடம் கருத்துக்களையும் ஐயங்களையும் கேட்டிருக்கின்றனர். புறவாழ்வில் ஏற்படும் பாதிப்புகளினால் எனது மன அரங்கில் ஏற்படும் கருத்துக்களும் கிளர்ச்சிகளம் எனது இலக்கியப் படைப்புகளுக்கு உந்துதல்களாக இருந்து வருகின்றன. நாவல் என்ற இலக்கிய உருவை நான் எனது கருத்து வெளியீட்டு மொழியாகக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் அந்நாளில் கல்கத்தாவிலும் பீகாரிலும் நான் சந்தித்த மக்களையே கதாபாத்திரங்களாகவும் உலவ விட்டிருக்கிறேன் . அவர்கள் யாவரும் தனி மனிதர்களாகத் தோன்றாமல் சமுதாயத்தின் சில பிரதிநிதிகளாகவே தோன்றுவார்கள். தனிமனிதப் பிரச்சனைகளை வளர்த்துக் கொண்டு செல்கையில் கதையமைப்பு வேறு விதமாக இருக்கக்கூடும். இங்கோ நிகழ்ச்சிகள் நடப்புகள் கற்பனையல்ல. இந்த நவீனத்துக் அந்நாள் (1973) மத்திய சாகித்ய அகாதமி நிறுவன்ப பரிசுபெறும் சிறப்பும் கிடைத்தது.
வேருக்கு நீர் - Product Reviews
No reviews available