வேலு பேசறேன் தாயி
வேலு பேசறேன் தாயி
‘‘இந்த வாழ்க்கை, ஓட்டப்பந்தயம் மாதிரி வெரட்டிக்கிட்டே இருக்கு. நாமளும் பின்னங்காலு பிடரியில அடிக்கிற வேகத்துல ஓடிட்டே இருக்கோம். எதுக்கு... யாருக்காக இப்புடி ஓடுறோம்னு தெரியாமலே ஓடிட்டே இருக்கோம். ஒரு எடத்துல நிக்கறப்பதேன்... அதப்பத்தி எல்லாம் யோசிக்க நேரங் கெடைக்குது!’’ - வடிவேலு அவர்கள் என்னிடம் இந்த வார்த்தைகளைப் பகிர்ந்த நிகழ்வு இப்போதும் நினைவில் இருக்கிறது. அனுபவ முத்துக்களாக வெளிப்படும் அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளும் நிஜமாகவே நெகிழத்தக்கவை; நம்மை நெறிப்படுத்தக்கூடியவை. ஒவ்வொரு குடும்பத்தின் தாய்மார்களையும் தனது உடன்பிறந்த பிறப்புகளாகப் பாவித்து, தன் வாழ்க்கை அனுபவங்களையும், தன் உறவுகள் குறித்த நிகழ்வுகளையும் எடுத்துச் சொல்லி, ‘உங்களில் நான் ஒருவன்’ என்பதை உண்மையான அக்கறையோடு வடிவேலு நிரூபித்திருக்கிறார் இந்தப் புத்தகத்தில். ஒவ்வொரு குடும்பமும் ஆனந்தத்தின் இருப்பிடமாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையில் உணவு தொடங்கி நாம் உண்ணும் உணவு வரையிலான அத்தனை விஷயங்களையும் ஆத்மார்த்தமாக நம்மோடு பகர்கிறார் வடிவேலு. செவாலியே சிவாஜி கணேசனுக்குப் பிறகு தமிழ் சினிமா உலகின் தரமான - தங்கமான அடையாளம் வடிவேலுதான். உடல்மொழியிலும் வட்டார வழக்கிலும் நெஞ்சைச் சிலிர்க்கவைக்கும் நகைச்சுவை அவதாரமான வடிவேலு, விகடன் பிரசுரத்துக்காக வழங்கும் இரண்டாவது புத்தகம் இது. நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மை உள்ளிட்ட அடிப்படைக் கூறுகள் தொடங்கி மாமியார் - மருமகள் பிரச்னைகள் வரை இந்தப் புத்தகத்தில் வடிவேலு சொல்லி இருக்கும் கருத்துகள் அவ்வளவு அற்புதமானவை. தமிழ்ப் பேசும் அத்தனை பேரின் இல்லங்களிலும் - உள்ளங்களிலும் நிறைந்திருக்கும் பாசக்காரராக இந்தப் புத்தகத்தின் மூலம் மறுபடியும் நிரூபித்திருக்கிறார் வடிவேலு.
வேலு பேசறேன் தாயி - Product Reviews
No reviews available