ஸ்டாலின்
ஸ்டாலின்
எழுதியவர் பத்திரிக்கையாளர் சோலை
தமிழகத்தின் துணை முதல்வர் என்ற இன்றைய நிலையை அடைவதற்குமுன் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த கரடு முரடான பாதையை எளிய நடையில், அழுத்தமான சம்பவங்களோடு விவரிக்கும் முழுமையான நூல் இது. திருமணம் ஆன ஐந்தாம் மாதமே மிசா சட்டத்தின் கீழ் அவர் கைதான அந்தத் தருணங்களையும், சிறையில் அவரைக் குறிவைத்து அரங்கேறிய கொடுமைகளையும் பற்றி இந்த நூலில் படிக்கும்போது, ஒரு உண்மை சட்டென மேலெழும்பி வரும். தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகனாகப் பிறந்துவிட்டதாலேயே மு.க.ஸ்டாலின் இத்தனை வேகமாக முன்னேறி வந்தாரா? என்ற கேள்விக்கான பதிலைச் சொல்லும் உண்மை அது! பெரிய இடத்து வாரிசு என்ற அந்தஸ்து பல சோதனைகளைத் தந்ததோடு, ஒருவகையில் சந்தேகமில்லாமல் ஸ்டாலினுக்கு உதவி புரிந்திருப்பதையும் இந்த நூல் மறைமுகமாக உணர்த்துகிறது. அதாவது... படிப்படியாக திட்டமிட்டு, பலப்பல சோதனைகளைக் கடந்து வந்து, பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவே ஐந்து முறை தமிழக முதல்வராக அமர்ந்துவிட்ட ஒருவருக்கு மகனாகப் பிறந்ததோடு, அவருடைய அரசியல் நடவடிக்கைகளை மிக அருகில் நின்று கவனிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்ததால் _ தந்தையைத் தலைவராகவே பார்த்து வளர்ந்து வந்ததால் _ அந்தத் தலைவருக்கே உரிய பல நுணுக்கங்களையும் திறமைகளையும் ஆழ்ந்து உள்வாங்க ஸ்டாலினால் முடிந்திருக்கிறது. அனுபவச் செறிவு மிக்க தன் எழுத்துகளால் மூத்த பத்திரிகையாளர் சோலை இந்த நூலில் விவரிக்கும் பல சம்பவங்கள் இதற்குமுன் நாம் அறிந்திராதவை என்பதும் உறுதி. ஓரளவு அறிந்திருக்கும் சம்பவங்களைப் பற்றி விவரிக்கும்போதும், சோலை தனது நேரடி அனுபவங்களைச் சேர்த்திருப்பதால், அவையும் புதிது போலவே சுவையும் விறுவிறுப்பும் சேர்க்கின்றன. உழைத்து, இன்னல்கள் பல அனுபவித்து, படிப்படியாக முன்னேறி வந்தவர்களின் வாழ்க்கை எப்போதுமே எவருக்கும் படிக்கத் தக்க பாடமாக விளங்கும். மு.க.ஸ்டாலின் பற்றிய இந்த நூலும் அதில் ஒன்றுதான்!
ஸ்டாலின் - Product Reviews
No reviews available