என் அண்ணா
என் அண்ணா
‘அனைவரும் நம்மைக் கொண்டாட வேண்டும்’ என்ற எண்ணம் உடையவர்கள் பல நேரங்களில் ஏமாற்றத்தையே சந்திக்க நேரிடும். ஏனெனில் கடவுளில்கூட எல்லோருக்கும் பிடித்த ஒரு கடவுள் என ஒருவரும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சியினரும் மறைமுகமாகக் கொண்டாடும் ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார் என்றால் அது அண்ணாதான். பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்துவந்து புதியதோர் அரசியல் இயக்கத்தைத் தொடங்கியபோது பெரியாருக்கு அண்ணாமீது வருத்தங்கள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் பெரியாரும் பிற்காலத்தில் அண்ணாவைப் புரிந்துகொண்டார். பெரியார் வகுத்துக்கொடுத்த பாதையில் இந்தச் சமூகத்தை ஒரு சில படிகளேனும் அண்ணா உயர்த்த நினைத்தார். அதற்கு அரசதிகாரம் தேவை என்பதை உணர்ந்து தி.மு.க&வை ஆரம்பித்தார். சில வருடங்களில் ஆட்சியையும் பிடித்தார். ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என அண்ணா முதல்வராக இருந்த குறுகிய காலத்தில் மகத்தான சில சாதனைகளைச் செய்துகாட்டினார். புற்றுநோய்க்கு அவரது உடலைத் தின்னக் கொடுக்காமல் இருந்திருந்தால் தம்முடைய வாழ்நாளில் அவர் பல சாதனைகளைச் செய்திருப்பார். அண்ணா குறித்த அற்புதமான தகவல்களை எல்லாம் அதன் உண்மைத் தன்மை மாறாமல் வைகோ இந்த நூல் வழியாகத் திரட்டிக் கொடுத்திருக்கிறார். அண்ணாவின் அரசியல் நாகரிகம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்திருக்கிறது; எதிர்க்கட்சியைக்கூட எவ்வளவு மரியாதையோடு நடத்தியிருக்கிறார் என்பதுபோன்ற பல தகவல்கள் இந்த நூல் வழியாக அறியக் கிடைக்கின்றன. அண்ணாவை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் பணியைத்தான் வைகோ இந்த நூல் வழி செய்திருக்கிறார். இளைய தலைமுறையினர் நிச்சயமாக அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்த நூல் ஒரு வழிகாட்டியாக அமையும்.
என் அண்ணா - Product Reviews
No reviews available